பூந்தளிர்களுக்கு புத்தாடைத் திட்டம் – 11ஆம் ஆண்டு விழா சிலம்பகவுண்டன் வலசில் சிறப்பாக நடைபெற்றது! 'New Clothes for Young Buds' Initiative – 11th Anniversary Celebrated in Grand Style at Silambagoundan Valasu!
பூந்தளிர்களுக்கு புத்தாடைத் திட்டம் – 11ஆம் ஆண்டு விழா சிலம்பகவுண்டன் வலசில் சிறப்பாக நடைபெற்றது!
வெள்ளக்கோவில் வட்டாரத்தில் பெற்றோரை இழந்த மற்றும் ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் “பூந்தளிர்களுக்கு புத்தாடைத் திட்டம்” 11ஆம் ஆண்டாக சிலம்பகவுண்டன் வலசில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆண்டு வெள்ளக்கோவில் வட்டார அரசுப் பள்ளிகளில் LKG முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெற்றோரை இழந்த மற்றும் ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட 159 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக பொதுமக்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், துணிக்கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்திட்டம், இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.
சிலம்பகவுண்டன் வலசு ஊர் பொதுமக்கள் மற்றும் அரசு ஆரம்பப்பள்ளி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபாகர் தலைமை தாங்கினார். பல்வேறு துணிக்கடைகள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கிய புத்தாடைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.
குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள்
குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் கார்ட்டூன் பொம்மைகள், பறையிசை, நடன நிகழ்ச்சிகள், மாயாஜாலக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் ஆயிஅம்மன் கேஸ் கம்பெனி உரிமையாளர் சுப்பிரமணி, தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், வெள்ளக்கோவில் ரோட்டரி சங்கத்தினர், மனித உரிமைக் கழகத்தினர், அரிமா சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி திவ்யா, துணைத் தலைவி ராஜேஸ்வரி, கல்வி ஆர்வலர் கவிதா, திருப்பூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியை லட்சுமி பிரபா நன்றி கூறினார்.
சமூக அக்கறையும் மனிதநேயமும் இணைந்த இந்த முன்னெடுப்பு, பெற்றோரின் அரவணைப்பை இழந்த குழந்தைகளின் முகங்களில் தீபாவளி மகிழ்ச்சியை மலரச் செய்துள்ளது.

Comments
Post a Comment